பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3:0 கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றது இங்கிலாந்து அணி. இந்நிலையில் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 79 ஓவரில் 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 78 ரன்களும், ஆகா சல்மான் 56 ரன்களும், அசார் அலி 45 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், அந்த அணியின் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அணியை மீட்டெடுத்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 81.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 111 ரன்களும், பென் ஃபோக்ஸ் 64 ரன்களும், ஒல்லி போப் 51 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்களான அப்துல்லா ஷபீக் 26 மற்றும் சான் மசூத் 24 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார் ஜேக் லீச்.. அடுத்து வந்த அசார் அலியையும் ப்ளீச் டக் அவுட் செய்து வெளியேற்றினார்.. இதையடுத்து பாபர் அசாமும், ஷாகிலும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். இருவரும் அரை சதம் அடித்த நிலையில் பாபர் அசாம் 54 மற்றும் ஷாகில் 53 ரன்களில் அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான் 7, சல்மான் 21 என வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 74.5 ஓவரில் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியின் சார்பில் ரெஹான் அகமது 5 மற்றும் ஜேக் லீச் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற 167 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் களமிறங்கி எளிய இலக்கு என்பதால் அதிரடியாக ஆடினர். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து கிராவ்லி 41 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய ரெஹான் அகமது 10 ரன்னில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் பென் டக்கெட் இருவரும் சேர்ந்து விக்கெட் விடாமல் ஆடினர் 3ஆம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 17 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 112 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெற்றிக்கு தேவைப்பட்ட 55 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. 3ஆவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரை 3 : 0 என்ற கணக்கில் இங்கிலாந்தின் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை ஹாரி புரூக் வென்றார். அதுமட்டுமல்லாமல் இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
England complete a 3-0 clean sweep with a dominant win in Karachi 👏#PAKvENG | #WTC23 | 📝 https://t.co/y5SkcqY16s pic.twitter.com/Ny7Q4EIrE1
— ICC (@ICC) December 20, 2022