டேன் டீ தலைமை அலுவலகத்தில் உதவி கணக்கு அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சரவணன் (40) என்பவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டேன் டீ தலைமை அலுவலகத்தில் உதவிக் கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனை காரணமாக இரண்டுபேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மீனாட்சி சரவணன் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் பிற்பகல் மூன்று மணி ஆகியும் மீனாட்சி சரவணன் வேலைக்கு வரவில்லை என்று சந்தேகமடைந்த ஊழியர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் கதவை பலமுறை தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது மீனாட்சி சரவணன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மீனாட்சி சரவணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று குன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.