கொரோனோ வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் தவித்த அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு மீட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் இருக்க பிப்.,19 வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் ஏற்கனவே கூறியுள்ளது. அதில்132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் கப்பலில் சிக்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் அந்த சொகுசு கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கப்பலில் உள்ள அனைவரையும் சோதிக்க ஜப்பான் முடிவு செய்தது. அதன்படி நடத்திய சோதனையில் இரண்டு இந்தியர்கள் மற்றும் 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியான நிலையில் கப்பலில் உள்ள 400 அமெரிக்கர்களை மீட்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. கப்பலில் உள்ளவர்களை மீட்க அந்நாட்டு வெளியுறவுத்துறை 2 மீட்பு விமானங்களை அனுப்பி உள்ளது. இரண்டு விமானங்களில் அமெரிக்கர்களை அழைத்துக் கொண்டு இன்று அதிகாலை டோக்கியோவிலிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டது. ஆனால் வைரஸ் தொற்று உள்ளவர்களுடன் பயணிக்க விரும்பாத ஒரு சில அமெரிக்கர்கள் கப்பலிலிருந்து வெளியேற மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கப்பலில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ ஸ்மித் என்ற பயணி, ‘நான் ஒரே வாகனத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்ய விரும்பவில்லை. அதனால் கப்பலிலேயே இருக்க முடிவு செய்துவிட்டேன். 19ம் தேதிக்கு பின் நான் அமெரிக்கா செல்வேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கப்பலில் உள்ளவர்களுக்கு உதவும் விதமாக 2,000 ஐபோன்களை ஜப்பான் அரசு வழங்கி உள்ளது.