கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகில் பி.முட்லூரில் டைல்ஸ் மற்றும் சானிட்டரி கடை நடத்தி வருபவர் பாலகிருஷ்ணன் மகன் ராஜா (35). இவரது கடைக்கு அதிகப்படியான டைல்ஸ் தேவைப்பட்டதால் அவரும், அவரது மேலாளர் மீனா பாண்டியும் ஆன்லைன் வாயிலாக டைல்ஸ் கடையை தேடினர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பணசங்கரி 7வது மெயின் ரோட்டில் வசிக்கும் வெங்கமராஜூ மகன் சுதர்சனராஜூ (44) என்பவர் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக இருந்தது. இதனை நம்பிய அவர்கள் சுதர்சனராஜூவை தொடர்புகொண்டு ஆன்லைன் வாயிலாக ரூபாய் 5 லட்சத்தை அனுப்பி, டைல்ஸ் அனுப்புமாறு கூறினர்.
அதன்பின் பணத்தை பெற்றுக் கொண்ட அவர், டைல்ஸ் அனுப்பவில்லை. அப்போதுதான் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததை அவர்கள் அறிந்தனர். இதுகுறித்து ராஜா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தன்னுடைய ரூபாய் 5 லட்சத்தை டைல்ஸ் அனுப்புவதாக கூறி, சுதர்சனராஜூ மோசடி செய்து விட்டதாக புகார் செய்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், தேவேந்திரன் போன்றோர் தலைமையில் சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜூ, ஏட்டுகள் மவுலீஸ்வரன், ஸ்டாலின், பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இத்தனிப்படை போலீசார், சுதர்சனராஜூவை தேடி பெங்களூரு விரைந்தனர். பின் அங்கு மறைந்திருந்த சுதர்சனராஜூவை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, கடலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் அவரிடமிருந்து 3 செல்போன்கள், 3 சிம்கார்டுகள், ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, போலி நிறுவன ஆவணம் போன்றவற்றை கைப்பற்றினர். அடுத்து சுதர்சனராஜூவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.