டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள்.
சென்னை அடுத்துள்ள பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசித்து வந்தவர் 37 வயதுடைய சுந்தரமூர்த்தி என்ற முருகன். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுகந்தி(32) என்ற மனைவி உள்ளார். சுந்தரமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கணவர் மீது காவல் நிலையத்தில் சுகந்தி புகார் கொடுத்துள்ளார். இதனால் சுந்தரமூர்த்தி மனைவியை விட்டு பிரிந்து அதே பகுதியில் வேறொரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனை அடுத்து கடந்த 29-ம் தேதி இரவு சுந்தரமூர்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நேதாஜி நகர் எழில் நகர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 பேர் திடீரென்று சுந்தரமூர்த்தி வழிமறித்து தங்களிடம் இருந்த கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்கள். இதில் படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன், பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அதே பகுதியில் வசித்த விஜய்பாபு, படை சந்தோஷ் ஆகியோர்தான் சுந்தரமூர்த்தி வெட்டிக் கொலை செய்தது என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விஜய் பாபு, படை சந்தோஷ் ஆகிய இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டால் சுந்தரமூர்த்தி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் கூறினார்கள்.