ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது.
கடந்த 2016ல் ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். தமிழக வீரர் மாரியப்பன் தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவரை தவிர வினோத்குமார் (வட்டு எறிதல்) தேக்சந்த் (ஈட்டி எறிதல்), ஜெய்தீப், சகினா (வலு தூக்குதல்) ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்திய வீரர்களுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.