பிரபலமான பீஸ்ஸா விற்பனை நிறுவனமான டோமினோஸின் இந்தியா வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறையின் இணை நிறுவனர் அலோன் கால் கூறுகையில், இந்திய டொமினோஸின் 13 டிபி உள் தரவை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். இதில் ஐடி, லீகல், பைனான்ஸ், சந்தைப்படுத்தல், நிறுவனத்தின் செயல்பாடுகள் போன்றவற்றுடன் 250க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பணியாளர் விவரங்களையும் ஹேக்கர்கள் திருடி உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் டொமினோஸின் இந்தியா பயன்பாட்டில் பீஸ்ஸா வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு விவரங்கள் உட்பட வாடிக்கையாளர் பெயர்கள், தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் ஐடிகள், விநியோக முகவரி, கட்டண விவரங்கள் உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர் விவரங்களும் ஹேக்கர்களால் சூறையாடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக சுமார் 18 கோடி ஆர்டர் விவரங்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடையும் விஷயமே, ஹேக்கர்கள் திருடிய இந்தியர்களின் முழு தரவையும் ஹேக்கர்கள் டார்க் வெப் மூலம் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளனர். இது குறித்து அலோன் காலின் தெரிவிக்கையில் முழு தரவுத்தளத்திற்கும் ஹேக்கர்கள் 550,000 டாலர் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளனர். இது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ .4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒட்டுமொத்த தரவை வினவுவதற்கு ஒரு தேடல் போர்ட்டலையும் உருவாக்க ஹேக்கர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதுவரை டொமினோஸின் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்களின் தரவு அதன் சேவையகங்களிலிருந்து திருடப்பட்டதா அல்லது கசிந்ததா என்பதைப் பற்றி நிறுவனம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.