காவல்துறையிலுள்ள கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்க உளவுபார்க்கும் போலீஸ் படைக்கும், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் ஒரு கும்பலுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் தான் “ட்ரிகர்”. இந்த ரகசிய போலீஸ்படையானது அழகம் பெருமாள் தலைமையில் இயங்குகிறது. நேர்மை மற்றும் துணிச்சல் உடைய இளம் அதிகாரி அதர்வாவுக்கு ரகசிய போலீஸ் படையில் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அவரிடம் நீ யார் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. இதனால் வெளியில் தலைகாட்டாதே என அழகம் பெருமாள் எச்சரிக்கிறார்.
இதற்கிடையில் குழந்தை கடத்தல் தொடர்பாக தகவல் கிடைப்பதால் அழகம் பெருமாளின் எச்சரிக்கையை அதர்வா மீறுகிறார். இதையடுத்து அதர்வா கடத்தல்காரர்களை அடித்து உதைத்து துவம்சம் செய்கிறார். அதன் விளைவுகள் என்ன..? என்பது மீதிக்கதை ஆகும். அதர்வா உடல், பொருள், ஆவி என அனைத்தையும் டிரைக்டரிடம் ஒப்படைத்திருக்கிறார். படம் முழுவதும் டுமீல் டுமீல் என துப்பாக்கி சண்டை போடுகிறார்.
இதனிடையில் கடத்தப்பட்ட குழந்தைகளை பார்த்து கண்கலங்குகிறார். அதே நேரம் காதலையும், காதலியுடன் டூயட் பாடுவதையும் தவிர்த்து இருக்கிறார். பாவம், தான்யா, அவருக்கு அதிக வேலையில்லை. அருண் பாண்டியனுக்கு போலீஸ்கார அப்பா வேடம் ரொம்ப பிடித்திருக்கிறது போல. ஆதார் திரைப்படத்திலும் போலீஸ்காரர், இப்படத்திலும் போலீஸ் அப்பா. படத்தில் ஆடுகளம் நரேன், ஜெயபாலன், ஆந்தகுடி இளையராஜா உட்பட பல நட்சத்திரங்கள் இருக்கின்றனர். இதனிடையில் சந்தோஷ்நாராயணன் இசையில் பாடல்கள் தேறவில்லை. டிரைக்டர் சாம் ஆன்டன் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார்.