ட்விட்டர் நிறுவனம் அண்மையில் புதிய சிறப்பம்சமாக “ஆல்ட் டெக்ஸ்ட்” டிஸ்க்ரிப்ஷன்களை அதிகமாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதற்கான பரிசோதனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக ட்விட்டரில் இடம் பெற்றிருக்கும் அனைத்து படங்களுக்கும் “ஆல்ட்” என்ற பேட்ஜ் பொருத்தப்படும். இதையடுத்து அந்த பேட்ஜை அழுத்தும்போது குறிப்பிட்ட படத்தின் டிஸ்க்ரிப்ஷன் காட்டப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இம்மாற்றம் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ட்விட்டரில் செயலியையும், தளத்தையும் பயன்படுத்துவோரின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கும் வகையில் புதிதாக அக்ஸெஸிபிலிட்டி குழுவை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சுமார் 3% ட்விட்டர் பயனாளர்கள் முதலில் சோதனை முயற்சியாக ஒரு மாதத்திற்கு இப்புதிய சிறப்பம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்றும் சர்வதேச அளவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த சிறப்பம்சம் வரும் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுவரையிலும் ஸ்க்ரீன் ரீடர் முதலானவற்றைப் பயன்படுத்தாமல் மக்கள் யாரும் “ஆல்ட் டெக்ஸ்ட்” டிஸ்க்ரிப்ஷன்களைப் படிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. பல பயனாளர்களும் இந்த அம்சத்திற்காக காத்துக் கொண்டிருந்ததாகவும், ட்விட்டர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் படங்களின் டிஸ்க்ரிப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் அவை ட்விட்டர் தளத்திற்கு என்று பிரத்யேகமாக வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தளத்தையும், செயலியையும் உருவாக்கும் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு புதிதாக அக்ஸெஸிபிலிட்டி குழுவை ட்விட்டர் உருவாக்கியது. அதன்பின் இது போன்ற புதிய சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வாய்ஸ் வாயிலாக அனுப்பப்படும் ட்வீட்களுக்கும், வீடியோக்களுக்கும் லைவ் கேப்ஷன் சேர்க்கும் வசதியை ட்விட்டர் உருவாக்கியது. மக்கள் தாங்கள் ட்விட்டரைப் பயன்படுத்தும்போது, ஆல்ட் டெக்ஸ்ட் வசதி இடம் பெற்றிருக்கும் படங்களுக்கும், இடம்பெறாத படங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்க்கும்போது அடுத்தமுறை புதிதாக படம் பதிவிடும்போது ஆல்ட் டெக்ஸ்ட் வசதியைப் பயன்படுத்த வைக்கும் என்றும் இதன் மூலம் இந்த அம்சம் பிரபலம் அடையும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.