Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில்… வாழைப்பழம் வீசும் திருவிழா கொண்டாட்டம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள தகட்டூரில் சிறப்பு வாய்ந்த மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருடம் தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக ராதாகிருஷ்ண சாமியார் தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதன் பிறகு அம்மன் புறப்பாடு கோவிலில் செய்யப்பட்டது.

அப்போது சாமியார் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது வாழைப்பழங்களை அள்ளி வீசினார். அதனை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் எடுத்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு, உருவச்சிலைகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர். இதையடுத்து கோவிலுக்கு 30-க்கும் மேற்பட்ட மண் குதிரைகள் எடுத்து வரப்பட்டு குதிரை விடும் நிகழ்ச்சியும் வாணவேடிக்கையுடன், இரவு தேரோட்டமும் நடைபெற்றது.

Categories

Tech |