கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை நாய் கடித்து குதறிய சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நபர் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடலை கொரோனா விதிகளின்படி பாலிதீன் கவரில் சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நேற்று முன்தினம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே ஆம்புலன்ஸ் இல்லாததால் அவரின் உடல் நேற்று காலை 8 மணிக்கு உடல் தகனம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் தகனம் செய்யப்பட்ட இடத்திலும் ஏராளமான உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்ததால் அவரின் உடல் மாலை 6 மணிக்கு தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனால் அவரின் உறவினர்கள் பிளாட்பாரமில் வைத்துவிட்டு உறவினர்கள் நிழலில் ஒதுங்கி இருந்தனர். இந்நிலையில் சற்று தொலைவில் இருந்த அவரின் உடலை நாய் கடித்து குதறியது. இந்த சம்பவம் உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தியதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நாய்கள் கடிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.