மரியுபோல் நகரத்தில் கொன்று குவித்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் சடலங்களை தோண்டியெடுத்து ரஷ்ய துருப்புகள் எரியூட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
உக்ரைன் நாட்டில் மரியுபோல் நகரத்தில் கொன்று குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் சடலங்களை தோண்டி எடுத்து ரஷ்யர்கள் எரியூட்டுவதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் புச்சா மற்றும் கீவ் நகரங்களில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின் வாங்கிய பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அட்டூழியங்களை போன்று மரியுபோல் பகுதியிலும் அம்பலப்படாமல் இருக்க ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருகின்றனர்.
மரியுபோல் நகரத்தில் இன்று டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட தகவலின் படி, ரஷ்ய துருப்புகள் சடலங்களை தோண்டி எடுப்பதாகவும் கண்காணிக்க ஆட்களை நியமித்துள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தங்களின் இறந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களை மீண்டும் புதைப்பதை தடுத்து நிறுத்த முயன்று வருவதாகவும் பதிவிட்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய துருப்புகள் நடமாடும் தகன உபகரணங்களுடன் மரியுபோல் நகரில் வலம் வருவதாகவும், துறைமுக நகரமான மரியுபோலை முற்றுகையிட்ட பின்னர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இன்றி சுமார் 100,000 மக்கள் சிக்கியிருப்பதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது “தற்போது செச்சென் கூலிப்படைகள் களமிறங்கியுள்ளது. அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாரத்தில் மட்டும் மரியுபோல் நகரில் 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 20,000 ஆகவும் அதிகரிக்கலாம். மேலும் மரியுபோல் நகரம் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்த மரியுபோல் நகரமானது இதுவரை ரஷ்ய துருப்புகள் வசம் சிக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.