தகவல் தர மறுத்த அதிகாரிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வானூர் வட்டத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு தகவல் தர மறுத்த அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு மக்கள் கேட்கும் தகவல்களை பெற, தகவல் அறியும் உரிமம் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தகவல்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அற்பத்தனமான காரணங்களைக் கூறி, முரண்பாடான தகவல்களை வழங்கியும், வருடக்கணக்கில் அலைக்கழிக்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
அதிகாரிகளுக்கு சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை. இன்னும் குறிப்பாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஊழல் குறித்த தகவல் கேட்டிருந்தால் அவ்வளவு எளிதில் தகவல் பெற முடியாத நிலை தற்போது உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ள தென்கோடி பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குறித்த விவரங்களை கேட்டு வழக்கறிஞர் அசோக்குமார் என்பது என்பவர் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு தகவல் பெற மனு செய்தார்.
ஆனால் வழக்கமான நடைமுறையில் பல காரணங்கள் கூறி தகவல்கள் வழங்கப்படாமல் பல வருடங்கள் அலைக்கழிக்க பட்டதாகவும், இதுகுறித்து தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப் பட்டதாகவும், அந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம், பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் தர உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தாமல் அலுவலர் மீண்டும் தகவல்கள் தர மறுத்ததால் மனுதாரரான அசோக்குமார் மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தகவல் ஆணையம் தகவல் அளிக்காத மாநில தகவல் ஆணையம்,பொதுத் தகவல் அலுவலருக்கு அபராதமும் துறை ரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு அறிவிப்பும் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு தகவல் ஆணையம் கடந்த 20ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தகவல் தர மறுத்த பொது தகவல் அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.