தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முந்தினம் தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதையடுத்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, தகுதியான 13,40,000 நபர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் 20 லட்சம் நபர்கள் 40 கிராமிற்கு மேல் நகை அடகு வைத்திருப்பவர்கள் என குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என கூறவில்லை என்று கூறினார். இதையடுத்து ஒரே ஆதார் அட்டையை வைத்து பலர் கடன்கள் பெற்றுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தள்ளுபடி அளிக்க முடியுமா? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.