சென்னையில் தக்காளி, முருங்கைக்காய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தை தொட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ 140 ரூபாயாக இருந்தது, இதனை தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கடும் வேதனையில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் காய்கறி விலையும் சேர்த்து தாறுமாறாக உயர்ந்துள்ளது.
சென்னையில் காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 150 முதல் 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில ஆன்லைன் தளங்களில் மட்டும் 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தக்காளியுடன் போட்டி போடும் விதமாக முருங்கைக்காய் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முருங்கைக்காய் மட்டும் 35 ரூபாய் விற்பனை ஆகின்றது. இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம் என்றால் சென்னைக்கு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி வருகிறது. ஆனால் கனமழை காரணமாக இந்த பகுதியிலிருந்து தக்காளி வரவில்லை.
ஆந்திரா, கர்நாடகா, கிருஷ்ணகிரி பகுதிகளிலிருந்து மட்டுமே தக்காளி சந்தைக்கு வருகின்றது. தினசரி 800 முதல் 900 டன் வரை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரும். ஆனால் தற்போது 300 டன் மட்டுமே வருகின்றது. இதன் காரணமாகவே தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று முருங்கக்காய் கிலோ 180 ரூபாய்க்கும், பீன்ஸ் அரை கிலோ 90 ரூபாய்க்கு, கேரட் ரூபாய் 50 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் வேதனையில் உள்ளனர்.