தங்க கடத்தல் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கூறுவேன். ஊடகங்களை கண்டு ஓடி ஒளிய மாட்டேனென்று ஜாமினில் வெளிவந்த ஸ்வப்னா கூறியுள்ளார்.
வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தூதராக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா மற்றும் ஊழியர்களை கைது செய்தனர். இந்த விவகாரமானது அப்போது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 1 வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த ஸ்வப்னா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது தன் தாயுடன் அவர் திருவனந்தபுரத்தை அடுத்த, பாலராமாபுரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் நேற்று கொச்சி சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது, தங்கக் கடத்தல் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கூறுவேன். மேலும் ஊடகங்களை கண்டு ஓடி ஒளிய மாட்டேன் என்றும், உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருவதாகவும், தற்போது வக்கீலை பார்ப்பதற்காகவே கொச்சி வந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.