Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தங்கைக்கு போனில் வந்த மெசேஜ்… ஆத்திரமடைந்த அண்ணன்கள்… தெருவில் நடந்த கொடூரம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் செல்போன் மூலமாக சகோதரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை சகோதரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் 27 வயதுடைய கூலித்தொழிலாளி ரவிக்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் சகோதரிக்கு செல்போனில் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைப் பற்றி அறிந்த செந்தில், ரவிக்குமாரை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் ரவிக்குமார் தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வந்துள்ளார்.

அதனால் மிகவும் ஆத்திரம் அடைந்த செந்தில், ரவிக்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். நேற்று இரவு ரவிக்குமார் சொக்கநாதன்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, செந்தில் மற்றும் அவரின் தம்பி செல்வம் ஆகியோர் ரவிக்குமாரை வழிமறித்து உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கி உள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரவிக்குமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்தில் மற்றும் அவரின் தம்பி செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |