பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டமாவு பகுதியில் விஜயகுமார்-சுபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுபா தனது தங்கையான சுஜி என்பவருடன் சேர்ந்து அழகியமண்டபம் சந்திப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து 1 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சுஜி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.
இதனை பார்த்த சுபா அந்த வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை காலால் மிதித்துள்ளார். இதில் அந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டது. இதனையடுத்து 2 பேர் எழுந்து அங்கிருந்து தப்பித்து விட்டனர். ஆனால் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை பிடித்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.