தனியார் நிறுவன ஊழியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவகானப்பள்ளியில் தனியார் நிறுவன ஊழியரான ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை பின்புறம் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் அனில், எல்லப்பா ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது ராஜேஷ் அனிலின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதனை அனில் பலமுறை கண்டித்தும் ராஜேஷ் தனது காதலை கைவிடவில்லை. இதனால் கோபமடைந்த அணில் தனது நண்பரான எல்லப்பா என்பவருடன் ராஜேஷுக்கும் மது வாங்கி கொடுத்து பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.