காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவியின் அண்ணனை அவரது நண்பரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கிருபன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிரிஜா என்ற தங்கை இருக்கிறார். இந்நிலையில் கிருபன்ராஜின் நெருங்கிய நண்பரான கவியரசன் என்பவரும், இவரது தங்கை கிரிஜாவும் காதலித்துள்ளார். இதனை அறிந்து கோபமடைந்த கிருபன்ராஜ் கிரிஜாவுக்கு அவசரமாக திருமண ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் கிரிஜா வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த கவியரசனை திருமணம் செய்து கொண்டார். இதனால் கிருபன்ராஜீக்கும் கவியரசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுள்ளது.
இந்நிலையில் கிருபன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கவியரசன் தனது சகோதரனுடன் இணைந்து அவரை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோவம் அடைந்த கவியரசன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கிருபன்ராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே கிருபன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கவியரசனையும், அவரது தம்பியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.