மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும். பின்னர் 10-வது நாளில் விஜயதசமி அன்று வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி தொடங்கிய நிலையில் கோவர்தனாம்பிகை தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்க குதிரையில் அமர்ந்து பசுமலையில் அம்பு எய்தல் மண்டபத்திற்கு சென்றுள்ளார். பின்னர் வன்னிமரத்தில் வெள்ளியிலான அம்புக்கு சர்வ பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து திருக்கரத்தில் வில் அம்பு ஏந்திய படி தங்கக் குதிரையில் மண்டபத்தினை 3 முறை வலம் வந்த முருகப்பெருமான் எட்டு திக்குமாக அம்பினை வைத்துள்ளார். அப்போது பக்தர்கள் அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமியை தரிசனம் செய்துள்ளனர்.