பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மன்னார்குடி தெருவில் வாசு-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை ஜெயந்தி தனது சொந்த ஊரான மா.அரசூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி தாலி சங்கிலி கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார்.
அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து அறிந்த போலீசாரும் அந்த மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் வருவதை அறிந்தால் மர்ம நபர்கள் கொள்ளிடம் கரையோரத்தில் இருக்கும் குருவாடி கிராமத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆற்றில் குதித்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்த போலீசார் எதிர் கரையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து மர்ம நபர்கள் மறுகரையில் வெளியேற முயன்ற போது பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் மற்றும் ஜவகர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.