கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகனாபுரத்தில் விவசாயியான பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி(56) என்ற மனைவி உள்ளார். நேற்று காலை பாஸ்கரன் வெளியே சென்ற பிறகு வளர்மதி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வளர்மதியின் முகத்தை துணியால் மூடி, கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.
அதே சமயம் வளர்மதி நகைகளை காப்பாற்றி கொள்வதற்காக திருடர்களுடன் போராடி ஒரு கட்டத்தில் ஒருவரின் கைவிரல்களை கடித்து குதறினார். ஆனாலும் அந்த மர்ம நபர் வளர்மதி கீழே தள்ளிவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட 10 பவுன் நகையுடன் இன்னொரு வாலிபருடன் தப்பி சென்றார். இதுகுறித்து வளர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.