5 லட்ச ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளிபட்டிணத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரலிங்கம் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சண்முகத்திடம் உசிலம்பட்டி பகுதியில் குறைந்த விலைக்கு தங்க பிஸ்கட் வாங்கி தருவதாக சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சண்முகம் 5 லட்ச ரூபாயுடன் உசிலம்பட்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தங்க பிஸ்கட் வாங்குவது குறித்து பேரம் பேசிக் கொண்டிருந்தபோது சில மர்ம நபர்கள் தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு நண்பர்கள் இருவரையும் மிரட்டி ஐந்து லட்ச ரூபாயை கைப்பற்றினார்.
அதன்பிறகு உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதனையடுத்து சண்முகம் உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது இது சம்பந்தமாக போலீசார் யாரும் வரவில்லை என காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.