தசரா விழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கி 12 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த வருடம் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் குலசேகரன் பட்டினத்திற்கு அதிகாரிகளுடன் வந்து ஆய்வு மேற்கொண்டார். பின் ஆட்சியர் கூறியுள்ளதாவது, தசரா திருவிழாவிற்கு இந்த வருடம் அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக மூன்று பொதுதரிசன வழியும் ஒரு கட்டண வழியும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கைக்குழந்த வைத்திருப்பவர்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பாதுகாப்புக்காக நேற்று 250 போலீசாரும் அடுத்த மாதம் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை 2150 போலீசாரும் 150 ஊர் காவல் படையினரும் பணியில் ஈடுபடுவார்கள். விழா நாட்களில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். கடற்கரையில் தற்காலிகமாக 80 கழிப்பிடமும் 3 இ-டாய்லெட் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. பேருந்து நிலையம், கோவில் கடற்கரையில் குடிநீர் வசதியும் குலசேகரன்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறியுள்ளார்.