காவிரி டெல்டா மாவட்டங்களில் முதன்மையான நகரம் தஞ்சாவூர். மாமன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டியெழுப்பிய பெருவுடையார் கோவில், சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை ஆகியவை தஞ்சாவூரில் தனிச் சிறப்புகளாகும். தஞ்சையின் தனிப்பெரும் அடையாளமாக தமிழ் பல்கலைக்கழகம் திகழ்கிறது. 1951ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற கலைஞர் எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார். திமுக 9 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்று திமுகவின் டி.கே.ஜி. நீலமேகம் தற்போதே எம்எல்ஏவாக உள்ளார். தஞ்சை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,88,900 ஆகும்.
நெற்களஞ்சியமாக இருந்தாலும் தஞ்சை தொகுதியின் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சாவூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டும் தொகுதி மக்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் சாலைகள் மிக மோசமாக பழுதடைந்து காணப்படுவதாகவும் மக்கள் சாட்டுகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்றும், தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொகுதியில் தொழில் வாய்ப்புகளை அதிகரித்து வாழ்வாதாரம் மேம்பட வழிவகுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தொகுதியில் சட்டகல்லூரி உருவாக்க வேண்டும் என்பதும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது தஞ்சாவூர் மக்களின் விருப்பமாக உள்ளது.