பிப்ரவரி ஐந்தாம் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது தஞ்சை பெரிய கோவிலும் தயாராகி விட்டது ஆனால் கோவிலில் தமிழ் மொழியில் திருகுட நன்னீராட்டு நடக்குமா இல்லை சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்விக்கான பதில் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது.
பெரும்பாலான இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. கும்பாபிஷேகம் நடத்த கோரி கடந்த 2008ம் ஆண்டு முதலே பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஓராண்டாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகத்திற்கு தஞ்சை பெரிய கோவில் தயாராகி வந்தது.
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனக் கோரி நாம் தமிழர் கட்சி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் நாதன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கையை முன்வைத்து தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதனிடையே குடமுழுக்கு விழாவிற்கு தடை கோரி வழக்கறிஞர் சரவணன் தரப்பில் முறையிடப்பட்டது. யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட புராதான தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தஞ்சை பெரிய கோவிலில் எந்த நிகழ்வு முன்னெடுத்தாலும் தொல்லியல் துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என்றும் இதுவரை அனுமதி பெற்றதாக தெரியவில்லை என்பதால் கும்பாபிஷேகமும் குடமுழுக்கு நடத்த தடை விதிக்குமாறு கோரப்பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே அரசுத்தரப்பில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்குகளை நாளை பட்டியலிடுமாறு கூறப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள் தஞ்சை குடமுழுக்கு தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு கும்பாபிஷேகம் எது நடைபெறும் என்று நீதிமன்ற விசாரணையின் முடிவில் தெரியவரும்.