ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தடியடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில், புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா நடைபெறும். இந்த உற்சவம் முடிந்த பிறகு உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்த பகுதியை சேர்ந்த 23 கிராம மக்கள் இரண்டாகப் பிரிந்து நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதிக் கொள்வார்கள். இதில் வெற்றி பெறும் குழு உற்சவ மூர்த்தியை எடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டும் மல்லேஸ்வர கோவிலில் கல்யாண உற்சவம் முடிந்தபிறகு தடியடி திருவிழா நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தீவட்டி, தடி ஆகியவற்றைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள அதோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டும், ஊர் மக்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து இந்த திருவிழாவை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.