தில்லியில் சாலையில் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் உறங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தில்லியின் சீமாபுரி பகுதியிலுள்ள பிரதானசாலையின் நடுவேயுள்ள தடுப்புச்சுவர் மீது நேற்று இரவு சில பேர் உறங்கிகொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 1:51 மணியளவில் அவ்வழியே அதி வேகமாக சென்ற லாரி ஒன்று மின்கம்பத்தில் மோதி, தடுப்புச்சுவர் மீது தூங்கிய 6 பேர் மீது ஏறியுள்ளது. இதனால் ஒரு இளைஞர் உட்பட 4 பேர் பலியாகினர்.
அத்துடன் 16 வயது சிறுவன் உட்பட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தில்லி போக்குவரத்துகழக பணிமனை அருகில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிஎல்எஃப் நோக்கி நிற்காமல் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.