கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் ரெட்டி என்பவர் தனது குடும்பத்தினர் 15 பேருடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் ஊட்டியில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்த்துவிட்டு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சுற்றுலா வேனின் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பாலன்(34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தட்டப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி இரும்பு தடுப்பின் மீது மோதி பக்கவாட்டில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் இடிபாட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை 2-வது கியரில் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.