மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சடையைகவுண்டன்புதூரில் சமையல் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார்.கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் மகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது மகேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பதியினர் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து காலை 7 மணியளவில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிணத்துக்கடவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.