கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று டெல்லி துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும் வரை பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பரவியதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.