தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தடுப்பூசி போட வரும் மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் முறையான அறிவிப்பு இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து பிறகு திரும்பி செல்கின்றனர். தடுப்பூசி வந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. தடுப்பூசி தட்டுப்பாட்டால் சென்னையில் இன்று தடுப்பூசி மையங்கள் இயங்காது. மேலும் தடுப்பூசி வந்ததும் விரைவில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.