தடுப்புச் சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கு கோவின் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் 10.2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் தடுப்பூசியை போட்டு கொண்டவர்கள் பலருக்கு அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. சிலருக்கு சான்றிதழ்களில் விவரங்கள் தவறாக உள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கு தீர்வு காணும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் மாநில அளவிலும் சிறப்பு அதிகாரிகளை கொண்டு உதவி மையங்கள் அமைக்குமாறு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்,
இதைத்தொடர்ந்து தற்போது கோவின் செயலியிலேயே அதை திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய வசதியில் பெயர், வயது, பாலினம், அடையாள அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ளலாம். வெளிநாட்டு பயணங்களுக்காக பாஸ்போர்ட் எண்ணையும் இணைக்க முடியும். மேலும் முதல் தவணை தடுப்பூசிக்கான சான்றுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் இருந்தால் அதை ஒரே சான்றாக இணைத்துக்கொள்ள முடியும். தடுப்பூசி செலுத்திய தேதியில் தவறு இருந்தால் அதனையும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் செல்போன் எண்களையும் மாற்றிக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.