ஜெர்மன் அரசு, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அடுத்த வார கடைசியிலிருந்து கட்டுப்பாடுகளில் விலக்கு அளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தி கொண்ட நபர்களுக்கு கட்டுப்பாடுகளில் சில விலக்குகள் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தாலும் இனிமேல் அவர்கள், தங்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, ஜெர்மனியில் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் இரவு நேர ஊரடங்கிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இனிமேல் அவர்களுக்கு உள் மற்றும் வெளிபகுதிகளிலும் இத்தனை நபர்களை தான் சந்திக்க வேண்டும் என்ற வரம்பும் கிடையாது.
அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு செல்வது அல்லது சலூன் கடைக்கு செல்வதற்கோ தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை. இதுபோன்ற விலக்குகள் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது.