சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி போட வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அம்மா மினி கிளினிக் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 250 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இதனையடுத்து தொற்று அதிகரிப்பின் காரணமாக தடுப்பூசி போட அதிகமான மக்கள் முன்வந்துள்ளதால் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு நாட்களாக தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.