வேதாரண்யம் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்று தடுப்பு மருந்தாக கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசி மருந்துகளை மாநில, மத்திய அரசுகள் தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தடுப்பூசி போட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்களுக்கு மருத்துவமனை சார்பில் முதலில் தடுப்பூசி இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தடுப்பூசி அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டு 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னர் டோக்கன் வழங்கி தடுப்பூசி இருப்பு இல்லை நாளை வாருங்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.