நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஒரேநாளில் 69.25 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய தடுப்பூசி போடுவதில் புதிய சாதனை படைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எங்களுக்கு தடுப்பூசி போடுங்கள்,நாங்கள் ஒன்றாக கொரோனாவை தோற்கடிப்போம் என அனைவரும் உறுதிமொழி அளிக்க வேண்டும். தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.