கொரோனா தடுப்பூசியால் எந்த பக்கவிளையும் ஆகாது என நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஒருவித தயக்கம் நிலவி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டதால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்குமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து மாரடைப்பிற்கும், தடுப்பூசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மிகவும் அவசியமானது என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவை மட்டுமே ஏற்படும் எனவும் , எனக்கும் முக வீக்கம் போன்றவை ஏற்பட்டது ஆனால் அது ஒரே நாளில் சரியாகி விட்டது என அவரது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.