அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என பள்ளி நிர்வாகம் அனுப்பிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கூடாது என பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் இந்த ஆண்டு தடுப்பூசி போடுபவர்கள் பாடசாலைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் கூறும் வரை மாணவர்களிடம் நெருங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மே மாதம் தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் பள்ளியில் வேலை செய்ய அனுமதி அளிக்கப்படாது என்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டதை பள்ளி நிர்வாகத்திடம் மறைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது மாணவர்களின் உடல் நலம் கருதி எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளியின் இணை நிறுவனர்கள் லீலா மற்றும் டேவிட் ஆகியோர் தடுப்பூசி திட்டத்திற்கு எதிரானவர்கள் என்பதும் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.