கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்த சமீகா பர்வீன் என்ற 18 வயது காது கேளாத மாணவி குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். வறுமையின் பிடியிலும் தடகளப் போட்டியில் தொடர்ந்து முன்னேறிய நிலையில், மூன்று ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு காது கேளாதோருக்கான உலக தடகள போட்டிக்கு தேர்வான நிலையில், கொரோனா விவகாரத்தால் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போலந்து நாட்டில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெற்ற தகுதித் தேர்வில் சமீகா பர்வீன் தேர்வாகி உள்ளார்.
ஆனால், இந்தியாவில் இருந்து வேறு எந்தப் பெண்ணும் போலந்துக்கு செல்லாததால் இவரை மட்டும் அனுப்ப இயலாது எனவும் நிதி இல்லை எனவும் அதிகாரிகள் கூறியதாக சமீகாவின் பெற்றோர் கூறினர். இதனால், கிடைத்த வாய்ப்பு கூட பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளதனால் வேதனை அடைந்த பெற்றோரும் அப்பகுதி மக்களும் இவரையும் இவரது தாயாரையும் தங்கள் செலவிலேயே அனுப்புவதற்காக முன்வந்தும் அரசு தரப்பிலிருந்து அனுமதி வழங்கவில்லை என கூறப்பட்டது.
சிறு வயது முதல் அரும்பாடுபட்டு உயர்ந்த இடத்தை நோக்கி பயணிக்கும் மாணவியின் கனவு மட்டுமல்ல அவரது பெற்றோரின் கனவும் தற்போது ஈடேறாத நிலையில் உள்ளூர் முதல் டெல்லி வரையிலான அதிகாரிகள், அமைச்சர்கள் என பல தரப்பினருக்கு மனு அளித்து மகளுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த உதவுமாறு பெற்றோர் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த புகார் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சமீகாவை போலாந்துக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடகளம் தகுதிச்சுற்றில், எட்டாவது இடம் பிடித்த சமீகா, பெண்கள் பிரிவில் முதலிடத்தில் உள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதி அவரை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை போலாந்து நடைபெறவிருக்கும் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.