Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடையை மீறிய மலைகிராம மக்கள்… வனத்துறை அலுவலகம் முற்றுகை… அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை…!!

விவசாயம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என மலைகிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அரசடி, இந்திராநகர், பொம்மராஜபுரம் போன்ற மலை கிராமங்களும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை வெளியேற  உயர் நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டிருந்துள்ளது. அதன் அடிப்படையில் மலைகிராம மக்களை வெளியேற்றுவதற்கு வனத்துறையினர் முதலில் கிராம மக்கள் வனப்பகுதிகளில் விவசாயம் செய்யக் கூடாது என தடை விதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவசாயம் செய்ய தடை விதித்தால் மலைகிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிமலை, பொம்மராஜபுரம் போன்ற மலை கிராம மக்கள் அரசடி கிராமத்தில் ஒன்று திரண்டு வனத்துறையினரின் தடையை மீறி விளை நிலங்களில் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் உளவு பணியை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

இதனையடுத்து வனத்துறையினரை விளைநிலங்களுக்கு செல்ல விடாமல் தடுத்து தொடர்ந்து உழவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்குப் பின்னர் கிராம மக்கள் அனைவரும் அரசடி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடும்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் கடந்த 6 மாதங்களாக வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விவசாயம் செய்வதற்கு தடை விதித்ததால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து செய்பவர்களை மட்டுமே வனப்பகுதியில் இருந்து வெளியேற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் 3 தலைமுறைகளாக வசித்துவரும் எங்களை வெளியேற சொல்வது நியாயமற்றது எனவும், எங்களை மீண்டும் விவசாயம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே அங்கு வந்த வருசநாடு வனச்சரகர் மலை கிராம மக்களிடம் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விளைநிலங்களுக்கு உழவு பணியில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இதனை கிராமமக்கள் ஏற்றுகொள்ளாமல் தொடந்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |