சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியது தொடர்பாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த மாணிக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சுவாமி புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் பால்குடம் எடுத்தல், தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்தனர். அதற்கு வருவாய் துறையினர், மாவட்ட காவல்துறையினர் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி மறுத்து எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்.
இந்நிலையில் மேலூர், தேவகோட்டை, திருச்சி ஆகிய பல ஊர்களிலிருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் கண்டரமாணிக்கம் அருகே வெளியாத்தூர் வயல் பகுதியில் நேற்று முன்தினம் ஆங்காங்கே கட்டுமாடுகளாக மாடுகளின் உரிமையாளர்கள் அழித்துவிட்டனர். அதை தொடர்ந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை ஆர்வத்துடன் பிடித்தனர். அதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அரசு உத்தரவை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக வெளியாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் திருக்கோஷ்டியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கண்டரமாணிக்கத்தை சேர்ந்த சுரேஷ் கருப்பையா, சுதாகர், பிரகாஷ், மனோகரன், முருகன் ஆகிய 5 பேர் மீது திருக்கோஷ்டியூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.