9- ஆம் வகுப்பு மாணவன் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்தீஷ், யுவனேஷ், விக்னேஷ் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்தீஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து வீட்டிற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரித்தீஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதனால் படுகாயமடைந்த ரித்தீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.