ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திருமலை அகரம் கிராமத்தில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் முதியவரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
ஆனால் இறந்தவரின் சட்டைப்பையில் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் ஒன்று இருந்துள்ளது. இதனால் திருச்சி நோக்கி சென்ற ரயிலில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து முதியவர் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.