ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அரியலூர்-ஓட்டக்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தின் ஓரத்தில் வாலிபர் ஒருவர் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அந்த வாலிபர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வாலிபர் விழுந்து கிடந்த இடத்திற்கும் சாலைக்கும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இருந்ததால் காவல்துறையினர் அந்த வாலிபரை துணியில் படுக்க வைத்து சாலைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அதன்பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அந்த வாலிபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மேகவர்ணன் என்பது தெரியவந்துள்ளது.
இவர் சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வாலிபரை சரியான நேரத்தில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காவல்துறையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.