வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி யுவராணி. இந்த தம்பதியினருக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த தம்பதியினர் 9 மாத குழந்தையுடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டது. இதை பார்த்து பதறிப்போன யுவராணி தண்டவாளத்தில் குதித்து தனது குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே ஏறும் போது அந்த வழியில் வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் யுவராணி மீது மோதி பலத்த காயத்துடன் கீழே விழுந்தார்.
அப்போது கையில் இருந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தது. உடனடியாக ரயில் டிரைவர் ரயில் எஞ்சினை நிறுத்தி விட்டார். இதையடுத்து காட்பாடி ரயில்வே போலீசார் தண்டவாளத்திலிருந்து தாய் மற்றும் குழந்தையை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். ரயில் தண்டவாளத்தில் சிக்கிய கை குழந்தை மற்றும் தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.