சிறுபுனல் நீர் மின் நிலையம் அருகே உயிரிழந்த மிளா மான் குட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் குருவனூற்று பாலம் அருகே உள்ள சிறுபுனல் நீர்மின் நிலையம் அருகே இருந்த நீரில் மிளா மான் குட்டி ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனையறிந்த கூடலூர் வனச்சரக வனவர் சிவலிங்கம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மானை மீட்டனர்.
இந்த மிளா மான் குட்டி பிறந்து 6 மாதங்களே ஆவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தண்ணீர் குடிக்க வந்த மான் குட்டி தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்குப்பின்னர் கம்பம் கால்நடை மருத்துவர் செல்வம் தலைமையிலான குழுவினர் உயிரிழந்த மான் குட்டியினர் உடலை பரிசோதித்து அங்கேயே பாதுகாப்பாக புதைத்துள்ளனர்.