தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பைரக்கானப்கானபள்ளி கிராமத்தில் வெங்கடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் விவசாய நிலத்திற்கு சென்று காய்கறிகளை பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதன்பின் சதீஷ்குமார் தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த தொட்டிக்கு அருகில் சென்றுள்ளார். இதனை அடுத்து சுமார் 30 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்ற போது எதிர்பாராதவிதமாக சதீஷ்குமார் வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சதீஷ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.