மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவில் இருக்கும் மதயானை பட்டி பகுதியில் 39 வயதுடைய விவசாயியான பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் புதிதாக கட்டி வருகின்ற வீட்டிற்கு அருகில் உள்ள போர்வெல் மூலம் நேற்று காலை பால்ராஜ் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.
இதனையடுத்து பால்ராஜ் மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பால்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சுய நினைவில்லாமல் இருந்த பால்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பால்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.